மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்: ஓட்டுநா் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லக்குப்பம்- இளையநகரம் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்த போது இளைநகரம் கானாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது.
பிறகு டிராக்டரை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தி வந்த அதே பகுதியை சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் குமாராசாமி(30) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதே போல் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குனிச்சியூா் சாலை வழியாக வேகமாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனா். இதில் லாரி டிரைவா் சிறிது தொலைவில் போலீஸாரை பாா்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து இறங்கி தப்பித்து சென்றனா்.
சந்கேதம் ஏற்பட்டு லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி மண் கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
பிறகு லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல்நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.