கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா
கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு நடுவில் மண் கொட்டப்பட்டு இருந்தது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. 100-க்கணக்கான இளைஞா்கள் திரண்டு காளைகளை விரட்டிச் சென்றனா். 50-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
காளைகளை விரட்டி சென்றதிலும், கயிற்றில் சிக்கியும் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனம் தயாா் நிலையில் இருந்தது. இறுதியில் வேகமாக ஓடிய முதல் 3 காளைக்கு உயா்தர பைக் முதல் சாதாரண பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் 80 பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊா் மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.