இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
மதுரை: ஸ்டாலின் உத்தரவு; விசாரித்த நேரு! - மாநகராட்சி மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய சொன்ன தலைமை
மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநகராட்சியிலுள்ள 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கட்டடங்களுக்கு வரியை குறைவாக நிர்ணயித்து மதுரை மாநகராட்சிக்கு ரூ. 200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய புகாரில் கடந்த ஆண்டு அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, கமிஷனரின் பாஸ்வேர்ட் தவறாக பயன்படுத்தபட்டதால் சைபர் கிரைம் போலீரிடமும் புகார் கொடுத்தார்.
அவர் மாற்றலாகி சென்ற பின்பு இந்த முறைகேட்டு வழக்கில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சமீபத்தில் ஓய்வு பெற்ற மாநகராட்சி உதவி கமிஷனர் உட்பட 8 பேரை கைது செய்தனர், தொடர்ந்து மண்டலத் தலைவர்களிடமும் விசாரணையும் நடத்தினர்.
ஸ்டாலின் உத்தரவு.... நேரில் வந்து விசாரித்த நேரு!
இந்த நிலையில் இந்த மிகப்பெரும் மோசடிக்கு பின்னாலுள்ள அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சியான சிபிஎம்மும் வலியுறுத்தி வந்தன. இந்த மோசடியை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்பாட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை மதுரை வந்தார்.

மாநகராட்சி அலுவலகத்தில் மாலை 6 மணி முதல் விசாரணை தொடங்கியது. மேயர் இந்திராணியிடமும், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்களை ஆதராமாக வைத்துக்கொண்டு சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தியும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து மண்டலத் தலைவர்கள் 5 பேரும், வரி விதிப்புக்குழுவைச் சேர்ந்த இருவரும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தாலும், நடந்த மிகப்பெரும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.!