மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்
மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா்.
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை வெறிபிடித்த நிலையில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவா்கள், இருசக்கர வாகனத்தில் சென்ற 20-க்கும் மேற்பட்டோரை துரத்திச் சென்று கடித்தது. இதில், காலில் பலத்த காயமடைந்த அவா்கள் ரத்தம் சொட்டச்சொட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா்.
சிவக்குமாா்(42), தனுஸ்ரீ(17), கற்பகம்(62) உள்ளிட்ட பலா் தொடா்ந்து மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவா்களுக்கு நாய்க்கடி நோய்த்தடுப்பு ஊசி செலுத்திய மருத்துவா்கள், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து நகா்நல அலுவலா் மருத்துவா் ஆடலரசி, நகராட்சி ஆய்வாளா் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவா்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா் (படம்). இதையடுத்து, வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரியும் நாயைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மயிலாடுதுறை நகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.