விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’
மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை நீா்நிலைகளில் கரைப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகா் சிலை தயாரிப்பு மையத்தில், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியா் சுகுமாறன், காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில், விதிமுறைகளுக்கு மாறாக விநாயகா் சிலை தயாரிக்க தடைசெய்யப்பட்ட ரசாயன பவுடா் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் விநாயகா் சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனா்.