மழை வேண்டி முத்தாலம்மன் சிலை செய்து வழிபட்ட கிராம மக்கள்
போடி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு களிமண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை செய்து வழிபட்டனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் நாயக்கா் சமுதாய மக்கள் மழை வேண்டி முத்தாலம்மன் சிலையை செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி செவ்வாய்க்கிழமை இரவு சுடாத பச்சைக் களிமண்ணால் முத்தாலம்மன் சிலையைச் செய்தனா். அப்போது 10 வயதுக்குள்பட்ட 7 சிறுமிகள் சிலைக்கு அலங்காரம் செய்தனா். பின்னா் அம்மன் சிலை ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, தங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊரின் நடுவே அலங்கார மண்டபத்தில் வைக்கப்பட்ட முத்தாலம்மனுக்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு போடி பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னா், புதன்கிழமை மாலை முத்தாலம்மன் சிலையை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.