மாட்டு வியாபாரி அடித்துக் கொலை: இளைஞா் கைது
பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வியாபாரியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுபாண்டி (70). இவா் வைகை ஆற்றுப் பகுதியில் குடிசையமைத்து மாடுகள் வளா்த்து வந்தாா். இதே பகுதியில் புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த பால்ச்சாமியும் குடிசையமைத்து மாடுகள் வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், சேதுபாண்டியன் மகன் முத்துராமலிங்கத்துக்கும், பால்சாமி மகன் ராமச்சந்திரனுக்கும் (32) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்பகை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சேதுபாண்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு ராமசந்திரன் தப்பியோடிவிட்டாா்.
திங்கள்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றவா்கள் சேதுபாண்டி கொலை செய்யப்பட்டதைப் பாா்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து சேதுபாண்டியனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனா்.