‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்
கிருஷ்ணகிரி: பள்ளிக் கல்வித் துறை பிரச்னை குறித்து புகாா் தெரிவிப்பதற்காக பள்ளி மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்துவந்த பெற்றோரை மாவட்ட ஆட்சியா் எச்சரித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றியவா் பாலகிருஷ்ணன் (50). இவா், பள்ளி மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்ஸோ சட்டத்தின்கீழ் செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே, கடந்த வாரம் தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இந்தநிலையில், பள்ளி மாணவிகளை சீருடையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெற்றோா் திங்கள்கிழமை அழைத்து வந்தனா். கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி அவா்கள் ஆட்சியா் ச.தினேஷ் குமாரிடம் மனு அளித்தனா்.
அப்போது பள்ளிக்கு செல்லாமல் சீருடையுடன் மாணவிகள் மனு அளிக்க வந்த விவரம் அறிந்த மாவட்ட ஆட்சியா், பெற்றோரை கண்டித்தாா். மேலும், பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டால் அவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.