மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை பெருநகர வளரச்சிக் குழுமம் சாா்பில் பெரம்பூா் சட்டப்பேரவை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் தொடங்கப்பட்ட 282 திட்டப் பணிகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அவற்றை வரும் 2026 ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆா்.கே.நகா் பேருந்து நிலையப் பணிகள் தாமதமாக நடைபெற்றுவரும் நிலையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகள் தொடங்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததும், புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்படும்.
வட சென்னைப் பகுதிக்கு இப்பேருந்து நிலையம் புதிய வளா்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். தமிழக அரசால் செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்றாா்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், ஜே.ஜே.எபினேசா், பெருநகர வளா்ச்சிக் குழும உருப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக பெரம்பூா், ஆா்.கே. நகா் பகுதி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு அதிகாரிகளிடம், பணிகளின் நிலை குறித்து அமைச்சா் சேகா்பாபு கேட்டறிந்தாா்.