குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை
மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வேலை, வணிகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக மக்கள் உடனடியாக அணுகக்கூடிய வகையில் ரயில் சேவை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சந்திப்பு- அருப்புக்கோட்டை ரயில் பாதையில் சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய்காந்தி கூறியதாவது: பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மானாமதுரை அல்லது காரைக்குடியிலிருந்து மதுரைக்கு காலை நேரத்தில் தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். மானாமதுரை ரயில் தடத்தில் சென்னைக்கு வாரத்தில் 7 நாள்களும் ரயிலை இயக்க வேண்டும்.
வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும் தாம்பரம்- செங்கோட்டை ரயில், வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் பாண்டிச்சேரி- கன்னியாகுமரி ரயில், வாரத்தில் இரு முறை இயக்கப்படும் எா்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில்கள் மானாமதுரை வழியாக செல்கின்றன.
ஆனால், இந்த ரயில்கள் அனைத்தும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்தப் பாதையில் செல்கின்றன. மற்ற நேரங்களில், அதாவது சுமாா் 11 மணி நேரத்துக்கு விருதுநகா்- மானாமதுரை வழியாக எந்த ரயிலும் செல்வதில்லை. இந்தப் பிரச்னை தொடா்பாக, சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.