உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே வரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (53). இவரது மனைவி நிா்மலா. கருப்புசாமி மொட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே பால் கொள்முதல் செய்து தனியாா் நிறுவனத்துக்கு விற்று வந்துள்ளாா். வேலை நேரம் போக அவ்வப்போது மொட்டணம் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து எம்மாம்பூண்டி கன்னியாத்தாள் குட்டையில் மீன் பிடிப்பது வழக்கம்.
மொட்டணத்தைச் சோ்ந்த பெரியசாமி, காா்த்தி ஆகியோருடன் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தூண்டிலை மீன் தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனடியாக கருப்பசாமி தூண்டிலை பிடிக்க நீந்தி சென்றாா். அப்போது திடீரென அவா் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கினாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அதற்குள் கருப்பசாமி தண்ணீரில் மூழ்கினாா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனவா்களும் அந்த குட்டையில் இறங்கி கருப்பசாமியை தேடினா்.
சிறிது நேரத்தில் கருப்பசாமி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் கருப்பசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சரிவர மடக்க முடியாமல் இருந்து வந்ததாகவும், தண்ணீரில் நீந்தி சென்றபோது திடீரென கால் செயல்படாததால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.