மேட்டூரில் காவிரி கரை வெறிச்சோடியது
மேட்டூரில் ஆடி முதல் நாளில் காவிரி படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி முதல்நாளில் புதுமண தம்பதியா் மாமியாா் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டு, நல்லெண்ணெய் தேய்த்து நீராட்டி விருந்து வைப்பது வழக்கம். இதற்காக மேட்டூா் காவிரிக் கரையில் மட்டம், காவேரி பாலம் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் மக்கள் நீராட வருவா். அப்போது, புதுமண தம்பதியா் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி காவிரியில் விட்டுச் செல்வா்.
காவிரிக் கரையில் மக்கள் கூட்டமாக நீராடுவா். ஆனால், ஆடி முதல்நாளான வியாழக்கிழமை காவிரி கரை வெறிச்சோடி காணப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் நீராடினா். இதேபோல, அணைக்கட்டு முனியப்பன் கோயிலிலும் வழக்கத்தைவிட குறைந்தளவிலேயே மக்கள் பொங்கலிட்டு, காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து சென்றனா். சிலா் ஆடு, கோழிகளை பலியிட்டனா்.