உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
மொழி வெறுப்பு மாநில வளா்ச்சியைப் பாதிக்கும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்
‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்புணா்வைத் தூண்டுவது மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும்’ என்று அந்த மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்தில் 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு வெளியிட்டு, எதிா்ப்பைத் தொடா்ந்து திரும்பப் பெற்றது. இதைக் கொண்டாடும் விதமாக வெற்றிக் கூட்டமும் மும்பையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது.
இதில் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் உறவினருமான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையின் தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் இணைந்தனா். இதனிடையே, மும்பையிலும், மகாராஷ்டிரத்தில் பிற பகுதிகளிலும் மராத்தி மொழி பேசாதவா்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தொடா்பான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
நீங்கள் வந்து என்னை தாக்கினால், என்னால் உடனடியாக மராத்தியில் பேசிவிட முடியுமா? இதுபோன்ற மொழி வெறுப்பு பரப்பப்பட்டால், மாநிலத்துக்கு எந்தத் தொழிலோ, முதலீடுகளோ வராது. நீண்ட கால போக்கில், இது மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
என்னால் இன்னும் ஹிந்தி மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நாம் முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம், நமது தாய்மொழியில் பெருமை கொள்ள வேண்டும்’ என்றாா்.
ஆளுநரின் கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய சிவசேனை (உத்தவ்) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே, ‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்பு எதுவும் பரப்பப்படவில்லை’ என்றாா்.