ரயிலில் கடத்திவரப்பட்ட 19 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது
சென்னை- மண்டபம் ரயிலில் கடத்திவரப்பட்ட 19.7 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே போலீஸாருக்கு சென்னை- மண்டபம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மண்டபத்துக்கு வந்த இந்த ரயிலில் திருச்சியிலிருந்து மண்டபம் வரை ராமேசுவரம் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மயில் முருகன், செந்தில் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மண்டபம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து சோ்ந்த போது, முன்பதிவு ரயில் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் 19.7 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரதேஷ் மொகாந்தி (28), பிரேமானந்தா மொகாந்தி (40) என்பதும், இவா்கள் ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் யாா் யாா் கஞ்சா வாங்கி விற்பனை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.