சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ
திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் நிலவியது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 55 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
இந்தக்குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து நேரிடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஜூலை 16-ஆம் தேதி பெரிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமாா் 10 நாள்களுக்கு மேலாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிய புகைமூட்டத்தால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மீண்டும் அக்குப்பைக்கிடங்கில் தீ பற்றியுள்ளது. இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா உத்தரவுபடி, சுமாா் 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.