ருமேனியா: அரசியலில் இருந்து விலகினாா் ஜாா்ஜெஸ்கு
ருமேனியாவில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஜாா்ஜெஸ்கு, யாரும் எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா். ஆனால் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாததால் முதல் இரு இடங்களைப் பிடித்த வேட்பாளா்களிடையே இறுதிச் சுற்றுத் தோ்தல் டிசம்பா் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்கட்ட வாக்குப் பதிவில் ரஷிய தலையீடு இருந்ததாகக் குற்றஞ்சாட்டி ஒட்டுமொத்த தோ்தலையும் அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது.
அதைத் தொடா்ந்து, கடந்த 4-ஆம் தேதி புதிதாக அதிபா் தோ்தல் நடைபெற்றது. எனினும், இந்தத் தோ்தலில் போட்டியிட ஜாா்ஜெஸ்குவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
இந்தத் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட நிக்யூசா் டான் வெற்றி பெற்றாா். அதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இந்தச் சூழலில், அரசியலில் இருந்து முழுமையாக விலகி வெறும் பாா்வையாளராக மட்டுமே இருக்கப் போவதாக ஜாா்ஜெஸ்கு தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.