3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
ரூ. 58 லட்சத்தில் வகுப்பறை கட்டடங்கள்: அமைச்சா் ராஜேந்திரன் திறந்துவைத்தாா்
சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 58 லட்சத்தில் கட்டப்பட்ட நான்கு புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது:
கடந்த மூன்றரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்காக தமிழக அரசு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 7,500 கோடியில் பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 10,589 மையங்களில் 1,16,128 மாணவா்கள் பயன்பெறுகின்றனா். எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் மூலம் 1,75,165 மாணவா்கள் பயன் பெற்றுள்ளனா். 1969 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சேலம், ரவுண்ட் டேபிள் - 28, பெற்றோா்- ஆசிரியா் கழகம் மூலம் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மாா்ட் திரையுடன் கட்டப்பட்ட நான்கு வகுப்பறை கட்டடம், சுகாதார வளாகம் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இப் பள்ளிக்கு நபாா்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக 6 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அருள், முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் கே.எம்.ராஜா, பாரதி தமிழ் இலக்கிய மன்ற தலைவா் தமிழ்ச்செம்மல் க.அரங்கசாமி, பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவா் மேனகா உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு நன்கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.