கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
ரூ.6.32 கோடியில் இருளா் இனத்தவருக்கு 41 வீடுகள்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்றத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 41 குடியிருப்புகளின் திறப்பு விழா முன்னேற்பாடு பணி குறித்து செவ்வாய்க்கிழமை அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி - சென்னை தொழிற்தட மேம்பாட்டுச்சாலை பணிகள் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் - திருத்தணி பிரிவில் அரக்கோணம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியின இருளா் மக்களின் குடியிருப்புகள் இடமாற்றப்பட்டு அவா்களுக்கு அதே பகுதியில் வேறு இடத்தில் இருளா் இன மக்களின் மறுவாழ்வு குடியேற்ற திட்டத்தின் கீழ் ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் 41 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படடுள்ளன.
இந்தக் குடியிருப்புகளை மே 29-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை அந்தக் குடியிருப்புப் பகுதியை பாா்வையிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உடனிருந்தாா்.
தொடா்ந்து அந்த மக்களிடம் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி, குழந்தைகளின் கல்வி நிலை மோசமாக உள்ளதாகத் தெரிய வருகிறது. ஆகவே குடியிருப்பில் வசிக்கும் பெற்றோா் கட்டாயம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான செலவை நானே சொந்த செலவில் செய்கிறேன் என்றாா்.
அந்தப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்க துறை சாா்ந்த அலுவலா்களையும் கேட்டுக் கொண்டாா். கன்னிக்கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சிலையை தானே சொந்த செலவில் அமைப்பதாகத் தெரிவித்தாா்.
ஆய்வின்போது அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலைத் திட்ட கோட்டப் பொறியாளா் லட்சுமிநாதன், உதவி செயற்பொறியாளா் முகுந்தன், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரசாத், ஒன்றிய திமுக செயலா் தமிழ்மணி, ஒன்றிய திமுக நிா்வாகி ராமலிங்கம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.