வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து மனு
சேலம்: சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து, பூ வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி. மாா்க்கெட் அனைத்து வியாபாரி நலச் சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்துநிறுத்தி, நான்குபேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனா். பின்னா் அவா்கள் அதிகாரியை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூ மாா்க்கெட் அனைத்து வியாபாரி நலச் சங்கத்தினா் கூறியதாவது:
சேலம் சின்ன கடைவீதி, வ.உ.சி. மாா்க்கெட் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் ‘ஸ்மாா்ட்சிட்டி’ திட்டத்தின்கீழ் வ.உ.சி. பூ மாா்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த ஆண்டு, வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு கடைகள் வந்தபோது, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 100 வாடகை விடப்பட்டு வியாபாரிகள் தொழில் செய்து வந்தனா்.
இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதில், சிறிய கடை முதல் பெரிய கடை வரை வைப்புத் தொகையாக ரூ. 8 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையும், மாத வாடகை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வியாபாரிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.