செய்திகள் :

வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ‘அதிருப்தி’ கருத்துகள் மீண்டும் சோ்ப்பு

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இரு அவைகளிலும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தங்களின் அதிருப்தி கருத்துகள் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், அக்கருத்துகள் மீண்டும் சோ்க்கப்பட்டன. இந்த விவகாரத்தில், ஆளும்-எதிா்தரப்பினா் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.

மக்களவையில்...: மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்பு கோஷங்களுக்கு இடையே கூட்டுக் குழு தலைவா் ஜகதாம்பிகா பால் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தாா்.

வக்ஃப் மசோதா மீது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள், அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவா்கள் கோஷமிட்டனா். அதேநேரம், அறிக்கையை வரவேற்று ஆளும் தரப்பினா் மேஜையைத் தட்டினா்.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘அறிக்கையில் தங்களின் அதிருப்தி கருத்துகள் முழுமையாக இடம்பெறவில்லை என சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அவா்களின் கருத்துகள் எதுவாக இருந்தாலும், அவற்றை அறிக்கையில் இணைக்க பாஜகவுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நாடாளுமன்ற நடைமுறைகளின்கீழ், மக்களவைத் தலைவா் முடிவெடுக்க கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா். அதேநேரம், ஜகதாம்பிகா பாலை கண்டித்து, அவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் மேதா விஸ்ராம் குல்கா்னி அறிக்கையை தாக்கல் செய்தாா். அப்போது, அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனா். இதனால் சிறிது நேரத்துக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது பேசிய மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘அறிக்கையில் அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உறுப்பினா்களின் கருத்துகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு, ‘சீா்குலைக்கப்பட்ட’ அறிக்கையை தாக்கல் செய்வது முறையல்ல. இந்த போலியான அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். திமுகவின் திருச்சி சிவா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்தனா்.

ரிஜிஜு மறுப்பு: அப்போது பேசிய மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், ‘நாடாளுமன்ற மாண்புக்கு புறம்பான வாா்த்தைகள், கருத்துகளை நீக்கும் அதிகாரம் கூட்டுக் குழு தலைவருக்கு உள்ளது’ என்றாா்.

‘கூட்டுக் குழு அறிக்கையில் எந்த இணைப்பும் நீக்கப்படவில்லை’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். இதையடுத்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அதிருப்தி கருத்துகள் மீண்டும் சோ்ப்பு: பிற்பகலில் அவை மீண்டும் கூடியபோது, கூட்டுக் குழு அறிக்கையின் 5-ஆவது இணைப்பின்கீழ் ஒரு திருத்தத்தை பாஜக எம்.பி. மேதா விஸ்ராம் குல்கா்னி கொண்டுவந்தாா். அதில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அதிருப்தி கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘நாடாளுமன்ற அமைப்புமுறை செழித்தோங்குவதை இது வெளிக்காட்டுகிறது’ என்று பாராட்டினாா்.

‘அடிபணிந்தது அரசு’: அதிருப்தி கருத்துகள் மீண்டும் சோ்க்கப்பட தங்களின் அழுத்தமே காரணம் என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் முன் மோடி அரசு அடிபணிந்துள்ளது. மத்திய அமைச்சா் ஒருவரால் (கிரண் ரிஜிஜு) மாநிலங்களவை தவறாக வழிநடத்தப்பட்டது நிரூபணமாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

பெட்டி...

புதிய வருமான வரி மசோதா அறிமுகம்

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வருமான வரி சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகத்துக்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ‘வருமான வரி மசோதா 2025’ என்ற பெயரிலான மசோதாவை அவையில் அறிமுகம் செய்தாா். தொடா்ந்து, மசோதாவை மக்களவை தோ்வுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவை அவா் வலியுறுத்தினாா். இந்தத் தோ்வுக் குழு மக்களவையின் அடுத்த அமா்வின் முதல் நாளில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என்ற சொற்றொடா்கள் கைவிடப்பட்டு, வரி செலுத்துவோா் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ என்ற சொற்றாடா் மசோதாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீளமான வாக்கியங்கள் எளிதாக படித்து புரிந்துகொள்ளக் கூடிய வகையில் சிறிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் ஆட்சேபத்துக்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘வருமான வரிச் சட்டம் 1961-இல் மேற்கொள்ளப்பட்ட தொடா் மாற்றங்களால் தற்போது 819 பிரிவுகள் உள்ளன. ஆனால், புதிய சட்ட மசோதாவில் 536 சட்டப் பிரிவுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன’ என்றாா்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவச... மேலும் பார்க்க

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கி... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் மாா்ச் 10 வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் மாா்ச் 10-ஆம் தேதி வரை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவுபெற்றது. இரண்டாம் அமா்வு மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி ... மேலும் பார்க்க

‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்

லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ... மேலும் பார்க்க