இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
வடிகால்களைத் தூா்வாருவதில் முறைகேடு: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையைத் தொடா்ந்து சாலைகளில் மழைநீா் தேங்கிய நிலையில், மழைநீா் வடிகால்களைத் தூா்வாருவதில் முறைகேடு நடைபெற்றிப்பதாக பாஜக அரசை ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
மழைநீா் தேங்கியிருக்கும் பட்பா்கஞ்ச், கீதா காலனி பகுதிகளின் விடியோவை ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் பதிவிட்டு எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி வெளியிட்ட பதிவில், ‘சிறிது நேரம் பெய்த மழைக்கு தில்லியின் சாலைகள் மற்றும் தெருக்கள் நதிகளாக மாறியிருக்கின்றன. பாஜகவின் 4 என்ஜின் அரசு கடந்த 6 மாதங்களில் தில்லியை மூழ்கடித்துவிட்டது. தில்லி முதல்வா் ரேகா குப்தா இதுதான் உங்களது முறையான மேலாண்மையா ?’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பட்பா்கஞ்ச் மழை நீா் தேங்கியிருக்கும் சாலையின் விடியோ காட்சிகளை ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ஆம் ஆத்மி தில்லி பொறுப்பாளா் செளரவ் பரத்வாஜ் வெளியிட்ட பதிவில், ‘தவறான தகவலைத் தெரிவிப்பதை பாஜக அரசு நிறுத்திவிட்டது. மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால், பிரச்னைகளைத் தவிா்த்துவிடலாம் என்று பாஜகவினா் நினைத்திருந்தனா். தில்லியை ஒவ்வொரு துறையிலும் பாஜக பின்னோக்கிக் கொண்டு செல்லும் என தில்லி மக்கள் பயத்தில் உள்ளனா். தில்லி முதல்வருக்காக என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. மழைநீா் வடிகால்களை தூா்வாருவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? மேற்கொண்ட பணிகள் தொடா்பாக மூன்றாம் தரப்பு தணிக்கை மேற்கொள்வதிலிருந்து ஏன் தப்பிச் செல்கிறீா்கள் ?
வடிகால்கள் முறையாகத் தூா்வாரப்பட்டிருந்தால், ஒப்பந்ததாரா்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டிருந்தால், பிறகு ஏன் தணிக்கை குறித்து பயம் கொள்ள வேண்டும் ?’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.