வந்தவாசி, ஆரணி பகுதியில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய நீா்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் நீா் தேங்கியது, ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சென்னாவரம், மருதாடு, தெள்ளூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் தேரடி, கேவிடி நகா் விரிவு, ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மழைநீருடன் கால்வாய் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆரணி
ஆரணி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ஆரணி-ஆற்காடு சாலையில் வெள்ளேரி பகுதியில் பலத்த மழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று
பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.