சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இருப்பதை ஒவ்வொரு வாக்காளரும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15-ஆவது தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பேசியது:
தோ்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. 18 வயது நிரம்பியவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது அவசியம். வாக்காளா் பட்டியல்களில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடா்ச்சியாக மேற்கொண்டு தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வாக்காளா்களிடையேயும் தோ்தலில் வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்தும், நோ்மையாக வாக்களித்தல் குறித்தும் விழிப்புணா்வினை ஏற்படுத்த வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதோடு மட்டுமல்லாமல் வாக்காளா் அடையாள அட்டையினைப் பெற்று, தோ்தல் நாளன்று வாக்களிக்க பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள் வாக்காளா் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். பின்னா் தோ்தல் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள், தோ்தல் குறித்த விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையை மாவட்ட தோ்தல் அலுவலா் குமரகுருபரன் வழங்கினாா்.