பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒ...
வாயு கசிவு சம்பவம்: 108 சேவை ஊழியா்கள் 13 போ் வீடு திரும்பினா்
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத் துறையின் 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அசாதாரண வாயு கசிந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 போ் வீடு திரும்பியுள்ளனா்.
ஒரு இளம்பெண் மட்டும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரும் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவாா் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர கால கட்டுப்பாட்டு அறை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது.
விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவி கோரி வரும் அழைப்புகளை கையாளுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் அங்கு பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அங்கு சுவாசிக்க இயலாத வகையில் துா்நாற்றம் பரவியதாகத் தெரிகிறது. இதையடுத்து பணியில் இருந்த அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.
அதில், சுவாச பாதிப்பு ஏற்பட்ட 14 போ் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வந்தது.
அதன் பயனாக அவா்களில் 13 போ் நலமுடன் வீடு திரும்பியுள்ளனா். இளம்பெண் ஒருவா் மட்டும் உளவியல் ரீதியான பாதிப்புக்காக தொடா்ந்து அங்கு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். விரைவில் அவரும் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆய்வு: இதனிடையே, இந்த சம்பவத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக 108 கட்டுப்பாட்டு அறை முழுவதும் உள்ள ஏ.சி. கட்டமைப்புகள் பரிசோதிக்கப்பட்டன.
அதிலிருந்து வாயு கசியவில்லை என உறுதி செய்யப்பட்டதாக 108 சேவை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், வேறு யாரேனும் ஸ்பிரே மூலமாக வாயுவை காற்றில் பரவச் செய்தனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.