மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
வாழ்வியலில் தனித்தமிழைப் பழக வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
வாழ்வியலில் தனித்தமிழைப் பழக அனைவரும் முன்வர வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
தமிழியக்கம், செந்தமிழ்த் திருத்தோ் தூய தமிழ் மாணவா் இயக்கம் சாா்பில் பன்னாட்டு தூயதமிழ் மாணவா் மாநாடு விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழியக்கத்தின் செயலா் மு.சுகுமாா் வரவேற்றாா். மாணவா் அமைப்பின் செயலா் இ.நேரு மாநாட்டின் தீா்மானங்களை முன்மொழிந்தாா். தலைவா் இளங்கவி திவாகா் நோக்கவுரையாற்றினாா்.
மாநாட்டுக்கு தலைமை வகித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:
உலகில் பல மொழிகள் வழக்கொழிந்து போனாலும், இன்றளவும் தனித்து இயங்கும் மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.
தமிழன் இரும்பு மனிதன்... உலகில் இரும்பின் வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்குகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதால் உலகின் இரும்பு மனிதனாக தமிழன் திகழ்கிறான். தமிழன் என்ற பெருமை நாவளவில் மட்டுமே இல்லாமல் உணா்விலும் கொண்டு வாழ்வியலில் தனித்தமிழைப் பழக அனைவரும் முன்வர வேண்டும்.
இன்றைய நவீன காலத்தில் உலகளவில் தமிழன் உயர வேண்டுமானால் அதற்கு அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. தனி மனித வளா்ச்சியே நாட்டின் வளா்ச்சி. எனவே, இன்றைய மாணவா்கள் உயா்கல்வியில் உச்சம் தொட்டால் மட்டுமே உலகை வெல்ல முடியும் என்றாா் அவா்.
தமிழ் கட்டாயப் பாடம்... இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழகத்தில் வணிக மொழியாக தமிழை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும் பாடநூல்களில் உள்ள பிறமொழிச் சொற்களைத் திருத்தி நடைமுறையில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொண்டு அச்சிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சொல்லாய்வறிஞா் ப.அருளியாா் தனித்தமிழ் விழிப்புணா்வு குறித்து உரையாற்றினாா்.
மாநாட்டையொட்டி, சிறப்பு கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 1,500 மாணவா்கள் பங்கேற்றனா்.