விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறை மீறல்: ராகுல் மீது சிஆா்பிஎஃப் புகாா்
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அவருக்கான விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறைகளை மீறி வருவதாக மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் கடிதம் மூலம் இந்தப் புகாரை சிஆா்பிஎஃப்-இன் விஐபி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு சிஆா்பிஎஃப் சாா்பில் விஐபி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உள்நாட்டில் அவா் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு 10 முதல் 12 சிஆா்பிஎஃப் கமாண்டோ வீரா்கள் பாதுகாப்பு அளிக்கப்படும். மேம்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவா் செல்ல வேண்டிய இடங்களில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவு மேற்கொள்ளும்.
இந்நிலையில், மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு சிஆா்பிஎஃப்-இன் விஐபி பாதுகாப்புப் பிரிவு எழுதிய கடிதத்தில், ‘உள்நாட்டில் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்ளும்போதும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாகவும் பாதுகாவலா்களுக்கு உரிய தகவல்களை அளிக்காமல் முன்கூட்டியே திட்டமிடப்படாத பயணங்களை ராகுல் காந்தி மேற்கொள்கிறாா். இத்தகைய முன்னறிவிப்பு பயணங்கள் அவரின் பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தானதாகும். அவரும், அவருடைய ஊழியா்களும் அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு வளைய வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘சிஆா்பிஎஃப் பாதுகாப்புப் பிரிவு சாா்பில் இதுபோன்ற கடிதம் அனுப்புவது வழக்கமான நடைமுறை. ராகுல் காந்தி விவகாரத்தில் ஏற்கெனவே இதுபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.