வெற்றியின் பிளாக் கோல்டு பட போஸ்டர்!
எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் பிளாக் கோல்டு திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
எம்எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம். மூர்த்தி வழங்கும், ’தீர்ப்புகள் விற்கப்படும்’ புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.
முதல் பார்வை போஸ்டரில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோஷமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.
நடிகர் வெற்றியின் ஆக்ரோஷமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கன்டெய்னரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது.
ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கருவாக இருக்கிறது.
ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மைச் சம்பவங்களைப் பற்றிய படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட படப்பிடிப்பாக ஏப்ரலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.