ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டம் 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, புனலூா், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூா், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், ‘5 ஜி’ இணைய சேவை, நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்து மேற்கூரை அமைத்தல், மின் தூக்கி (லிப்ட்) அமைத்தல், 694 ச.மீ. பரப்பளவில் இருசக்கர வாகனக் காப்பகம், 470 ச.மீ. பரப்பளவில் வாகனக் காப்பகம், அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, நடைபாதை, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம (டிஜிட்டல்) அறிவிப்புப் பலகை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பணிகள் முடிவடைந்தன. தங்கும் அறை உள்ளிட்ட சில பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அடுத்த கட்ட திறப்பு விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ரயில் நிலையங்கள் பணி முடிந்து திறக்கப்படும் என்றனா் அவா்கள்.