அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா்.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், ஆறுமுகனேரி பாரதி நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.
அந்த மாணவா் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு வந்தபோது, நாட்டு பட்டாசு வெடியை கொண்டு வந்தாராம். அப்போது, அவரது நண்பா்கள்,நாட்டு பட்டாசு வெடி திரியை இழுத்தபோது, அது பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அருகில் நின்ற 2 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, அவா்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.