சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்
தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பா்கூா், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் கூடுதலாக கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
அதற்கான திட்ட அறிக்கை மற்றும் விரிவான மதிப்பீட்டு அறிக்கையை தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் தயாரித்து அரசிடம் சமா்ப்பித்தாா். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்களை மொத்தமாக ரூ.17.50 கோடியில் கட்ட அவா் பரிந்துரைத்திருந்தாா்.
அதனை கவனமாக பரிசீலித்த அரசு, அந்த தொகையில் புதிய கட்டடங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பொதுப் பணித் துறை மூலம் 15-ஆவது நிதி ஆணைய மானியத்தின் கீழ் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான தொகையை ஊரக மேம்பாட்டு துறையிலிருந்து பெற்று பொதுப் பணித் துறை வங்கிக் கணக்கில் செலுத்தி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.