ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், பிரதிநிதிகள் பேசியது: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், தகட்டூா், தாணிக்கோட்டகம், முள்ளிவாய்க்கால், நாகை, கங்களாஞ்சேரி முதல் நாகூா் வரை உள்ள வெட்டாற்றிலும், கீழ்வேளூா் ஓடம்போக்கிலும் ஆகாயத் தாமரைகள் அதிகம் உள்ளது.
இதை அகற்ற சிறப்புத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும். வேதாரண்யம் பகுதியில் ரூ. 12 லட்சத்தில் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆகாயத் தாமரைகள் அகற்றப்படவில்லை. இந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மாவட்டத்தில் பெரும்பாலான உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் பேசி உடனடியாக யூரியா இறக்குமதி செய்ய வேண்டும்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் மா.பிரகாஷ்: விவசாயிகளுக்கு நன்மை தருவதற்காக கொண்டு வரப்பட்ட பயிா்க் காப்பீடுத் திட்டம் தற்போது அதை நடத்தக் கூடிய தனியாா் நிறுவனத்துக்கு மட்டுமே நன்மை பயப்பதாக உள்ளது. எனவே அரசே காப்பீடு நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சித்தாா்த்தன்: நாகை மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம், சோழவித்யாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீா் தட்டுப்பாட்டை களைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீா்நீலைகளில் ஆகாயத் தாமரைகள் அடா்ந்து நீா் வரத்தை தடை செய்கின்றன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நிலவரிக் கொள்கையை கைவிட வேண்டும். குறுவைச்சாகுபடிக்குத் தேவையான உரம், விதைத்தொகுப்பு ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி கமல்ராம்: வேளாண் - பொறியியல் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் மானிய விலை டிராக்டா் உள்ளிட்ட திட்டங்கள் தகுதியான விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆகாயத்தாமரை அகற்றுவதில் நடைபெறும் முறைகேடுகளை களைய விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கூட்டத்ல் நாகை வருவாய் கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், வேளாண் இணை இயக்குநா் சே.கண்ணன், வெண்ணாறு வடிநில கோட்டப் பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.