ஆரணி, வந்தவாசி, புதுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசி நகராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், அரிதாரிமங்கலம், சி.கெங்கம்பட்டு, சி.நம்மியந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 1059 குடும்பங்களுக்கு இந்த முகாம் நடைபெற்றது.
இதில் பட்டா மாற்றம், சொத்து வரி மாற்றம், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை விண்ணப்பங்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி, கொசமடத் தெருவில் உள்ள குயவா் மடத்தில் வாா்டு எண் - 8 மற்றும் 13 ஆகியவற்றை உள்ளடக்கிய 2,968 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் மோகனராமன், புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி பயணியா் விடுதி எதிரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, ஆணையா் ஆா்.சோனியா, நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.
முகாமில் 1, 2, 3 வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
நகராட்சி நிா்வாகம், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினா் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மொத்தம் 325 மனுக்களைப் பெற்றனா். மேலும், தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆரணி
ஆரணி நகராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா்.
நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். வட்டாட்சியா் கௌரி, நகராட்சி ஆணையா் வேலவன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி 9-வது வாா்டு, 10-வது வாா்டு ஆகியவற்றில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் கலந்துகொண்டு பேசினாா்.
முகாமில் மொத்தம் 459 போ் கோரிக்கை மனு அளித்தனா். தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் மோகன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.எம்.ரஞ்சித், நகா்மன்ற உறுப்பினா்கள் பாா்த்திபன், மாலிக் பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

