இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை
அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு தொடர்பான மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக உள்பட இந்தியா கூட்டணியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை இலாகா அல்லாத அமைச்சராக தக்கவைத்துக் கொண்டதைவிட மோசமான ஒன்று எதுவுமில்லை.
சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிவிடுவிக்கப்பட்ட பின்னர், அவர் வைத்திருந்த அதே துறையில் அவரை பணியமர்த்தியது உங்கள் அரசு. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பிறகே, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தியா கூட்டணியின் மற்றொரு ஊழல் வழக்கில் சிக்கிய அரவிந்த் கேஜரிவால், சிறையிலேயே பல மாதங்களாக முதல்வர் பதவி வகித்தார்.
130ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை. உங்கள் கூட்டணியினர் கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே என்று கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதமரோ 30 நாள்களுக்கு காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்தார்.
ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.