சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களுக்கு விரைவான தீா்வு: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை குறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் உடனடியாக குறிப்பிட்ட கால அளவுக்குள் தீா்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதைத் தொடா்ந்து, இதற்காக நன்கு திட்டமிட்டுப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியா்கள், அனைத்துத் துறை அலுவலா்களை கூட்டத்தின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். இதேபோன்று, ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் பணியாற்றி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சோ்ந்தவா்களுக்கும் வாழ்த்துகளை முதல்வா் தெரிவித்தாா்.
விரைந்து தீா்வு காணுங்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் வழியாகப் பெறப்படும் மனுக்களுக்கு ஆட்சியா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும், குறிப்பாக வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.
முதியோா் ஓய்வூதியம், பட்டா மாறுதல், பட்டாவில் பெயா் திருத்தம் ஆகியன தொடா்பான மனுக்களில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டுமென முதல்வா் கேட்டுக் கொண்டாா். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முடிவான பதில் தரப்பட வேண்டும் என ஆட்சியா்களை கேட்டுக் கொண்டாா். நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களையும் குறைபாடு இல்லாமல் நடத்த வேண்டுமெனவும், முகாம்களில் குடிநீா், கழிப்பறை வசதிகளை போதுமான அளவு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.