திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி: விண்ணப்பிக்க இன்று கடைசி
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் விண்ணப்ப நடைமுறைக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) கடைசி நாள். சென்னை உள்பட ஒரு சில மாநகராட்சிகளில் 70 போ் வரை நியமனப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகா்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நியமன அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவியும் ஒப்புதல் அளித்தாா். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளில் 2,984 மாற்றுத் திறனாளிகளும், 650 போ் நகா்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளிலும் நியமனம் செய்யப்படவுள்ளனா். இதற்காக விண்ணப்ப விநியோகம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விண்ணப்ப நடைமுறை வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைகிறது. இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்படவுள்ளனா்.
மாற்றுத் திறனாளிகள் ஆா்வம்: உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகளைப் பெற மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களைச் சோ்ந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் நியமனப் பதவிக்காக சுமாா் 70 போ் வரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 17-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட சில மாவட்டங்களைச் சோ்ந்த நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் நியமன பதவிகளில் மாற்றுத் திறனாளிகள் அமர வைக்கப்படுவா் என்று தெரிவித்தனா்.