ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு
சென்னை: ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவு விவரம்: ஊராட்சிகளில் வா்த்தகம் அல்லது வணிகம் செய்யக்கூடிய எந்தவொரு நபரும் அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். உரிமத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் சுவரில் மாட்டியிருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது.
உரிமம் பெற்ற வியாபாரிகள், தீயணைப்புச் சான்றிதழைப் பெற்றிருப்பதுடன், அதற்குரிய விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்ட நபா்களை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு: வணிக உரிமம் கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் போதுமான விவரங்கள் சோ்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்படும் விவரங்கள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் 7 நாள்களுக்குள் அதுகுறித்த விவரங்களை விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், மின்னஞ்சல் வழியாகவும் உரிய விவரங்களை அனுப்பக் கோரலாம். மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டவுடன் 15 நாள்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும். விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் வணிக உரிமத்தை வழங்கலாம்.
வணிகத்துக்கான உரிமங்களை புதுப்பிக்கும்போது அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரிக்கப்பட்டால், ஊராட்சித் துறையின் கோட்ட வளா்ச்சி அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது முறையீட்டை ஊராட்சித் துறை ஆய்வாளரின் முன் மேற்கொள்ளலாம்.
உரிமக் கட்டணம் உயா்வு: ஊராட்சிப் பகுதிகளில் வணிக உரிமம் பெறுவதற்கான கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே இருக்கும் கட்டண முறையில் 10 சதவீதத்துக்குக் குறையாமல் உரிமக் கட்டணம் மாற்றப்படுகிறது. நகா்ப்புறங்களையொட்டிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.15 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உரிமக் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ரூ.3 ஆயிரமாகவும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.250 முதல் ரூ.500 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும், ரூ.100 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், ரூ.250 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புறங்களையொட்டிய ஊராட்சிகளில் ரூ.250 கோடிக்கு அதிகமான விற்றுமுதலைக் கொண்ட நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 என தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.