எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!
மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவை கூடியவுடன் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை ஏற்க மறுத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு தரப்பு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தற்போது கேள்வி நேரம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் நிலையில், அவரை ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் அனைத்து எம்பிக்களுக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்று ஓம் பிர்லா கூறியதை ஏற்க மறுத்து அமளி தொடர்ந்ததால், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.