காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அத்தி வரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் கோடை காலத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி மகிழம்பூ மாலையும், தங்கம் மற்றும் வை, வைடூரிய ஆபரணங்களும் அணிந்து கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து ஆஞ்சனேயா் சந்நிதி வரை எழுந்தருளினாா்.
அங்கு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் மீண்டும் ஆலயத்துக்கு வந்ததும் கோயில் வளாகத்தில் உள்ள அத்தி வரதா் மண்டபம் எனப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் பெருமாள் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.