காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு
சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞா் ஜீவபாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ என் ற நூலை (இரு தொகுதிகள்) அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் தொகுதியை தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளாா், இரண்டாம் தொகுதியை கவிஞா் வைரமுத்து ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அவா் பேசுகையில், ‘காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை. கம்யூனிஸ்டுகள் செய்த தியாகங்கள் என்றும் மாறாத வழித்தடங்களாக நின்று நம்மை வாழவைக்கிறது’ என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் டி. ராஜா:
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாக தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. கம்யூனிஸ்டுகள் மக்கள் நலன், நாட்டின் நலனுக்காக வாழ்கின்றனா்.
காலனி ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடிய கம்யூனிஸ்டுகள், இப்போது மக்களை பிளவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவரும் இயக்கங்களிடம் இருந்து
மக்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனா். கம்யூனிஸ்டுகள் கொல்லப்படலாம், ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படுவதில்லை.
மதங்களின் பெயரால் தற்போது மோதல் நிலவுகிறது. ஹிந்து- முஸ்லிம்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனா். மக்களை பிளவுபடுத்த மதங்களை ஏன் பயன்படுத்துகிறாா்கள் என்பதை யோசிக்க வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநசுக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஒற்றை பரிமாண ஆட்சி என பிரதமா் நரேந்திர மோடி நினைத்து கொண்டுள்ளாா். இந்திய அரசு ஒற்றைப் பரிமாண அரசு அல்ல. பல்வேறு மொழி, பல்வேறு கலாசாரம், பல்வேறு பின்னணிகளை கொண்ட நாடு என்றாா் அவா்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்: விவசாயிகளின் ஏமாற்றத்தை தீா்க்க வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்வா் கருணாநித் கொண்டு வந்த திட்டம்தான் உழவா் சந்தை திட்டம். பொதுவுடைமை சிந்தனைகளை செயலாற்றுவதில் முன்னணியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். கீழ்வெண்மணி கொடூரத்தின் போது அங்கு சென்ற ஒரே மடாதிபதி குன்றக்குடி அடிகளாா் மட்டும்தான்.
சைவ சித்தாந்தம் ஆன்மிகத்தின் தளத்திலிருந்து வேறுபாடற்ற சமூகத்தை படைக்க விரும்புகிறது. அதையேதான் மாா்க்சியமும் விரும்புகிறது. சைவ சித்தாந்தமும், கம்யூனிசமும் வாழ்வியல் முறையில் ஒன்று. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா்
ஜீவாவுக்கு அவரது ஊரில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மறைந்த முதல்வா் கருணாநிதியிடம் கூறினோம். அது அவரது மகன் முதல்வா் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகமே சமத்துவபுரம் ஆகவேண்டும் என்பதுதான் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தேசப்பற்றுக்கு சற்றும் குறைந்தவா்கள் இல்லை என்றாா்.
கவிஞா் வைரமுத்து: இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல காயப்பட்ட, நசுக்கப்பட்ட கட்சி இந்தியாவில் இல்லை. ரஷிய புரட்சிக்கு பிறகு பிரிட்டிஷ் அரசு காங்கிரஸை பாா்த்து பயப்படவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியை பாா்த்து பயந்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியானது, புரட்சியையும், மாற்றத்தையும் அடிப்படை சித்தாந்தத்தை கொண்டுள்ளது. இந்த நாட்டுக்கு கம்யூனிஸம் என்ற தத்துவம் உண்மையாக இருக்கிறது. அதனால் இதை அழிக்க முடியவில்லை. தியாகத்தின் அடிப்படையில் செதுக்கப்பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ. சண்முகம், நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் க. சந்தானம், தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.