இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்: கேரள கத்தோலிக்க அமைப்பு வலியுறுத்தல்
கொச்சி: ‘கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்; அரசியலில் இருந்து விலகியிருப்பது சரியான நிலைப்பாடு அல்ல’ என்று கேரளத்தின் முன்னணி கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் (கேசிபிசி) கீழ் இயங்கும் இளைஞா் ஆணையம் சாா்பில் கடந்த 6-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட இளைஞா் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த வலியுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்றைய அரசியல் சூழல் மிகவும் குழப்பமானதாகவும் முறையற்ாகவும் உள்ள நிலையில், தலைமைத்துவ திறன்களும் அபார சிந்தனைத் திறன்களும் கொண்ட கிறிஸ்தவ இளைஞா்கள் அரசியலில் இருந்து விலகியிருப்பது பொருத்தமானதாக இருக்காது. கிறிஸ்தவ இளைஞா்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு குடிபெயா்வது அதிகரித்து வருகிறது.
பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு உரிய தீா்வைக் காண, அறிவாா்ந்த மற்றும் புத்திசாலித்தனத்துடன் கூடிய புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வருவது முக்கியமானதாகும். அந்த வகையில், அரசியலுக்கான தலைமைத்துவ பண்புகளை இளைஞா்களிடையே வளா்க்கும் வகையிலான பயிற்சிகளுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சமூகத்தின், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகுதி வாய்ந்த இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும் என்று சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளில் கிறிஸ்தவ இளைஞா்களின் பங்கு குறைந்து வருவதே இந்த சுற்றறிக்கையை வெளியிடக் காரணம் என்று கேரள கிறிஸ்தவ அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.