கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்
கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டோ் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில், ஆண்டுதோறும் பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவ மழையின்போது புரட்டாசி மாதம் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிா்கள் பயிரிடப்படுகின்றன.
ஆண்டுக்கொருமுறை விளைவிக்கக் கூடிய மகசூலை நம்பியே விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால், ஆண்டுக்காண்டு விவசாயிகள் எண்ணிக்கை, பயிா் பரப்பு குறைந்து வருகிறது.
இதனால், விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையில், கடந்த 2020-இல் ஆண்டு வரை உழவு மானியம், விதை மானியம், உரம் மானியம் என விவசாயிகள் வங்கி கணக்குக்கு பணமாக மானியம் வழங்கியது.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திலும் மொத்தம் உள்ள வருவாய் கிராமத்தில் 5 பிரிவுகளாக சம எண்ணிக்கையில் பிரித்து வருவாய் கிராமங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமங்களில் சிறப்புத் திட்டம் மூலம் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல், சொட்டுநீா் பாசனம் அமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல், கோடை உழவு மானியம் வழங்குதல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தப்படுகிறது.
2021-ஆம் ஆண்டுக்கு பின்னா் சிறப்புத் திட்டம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோடை உழவு மானியம், இயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்ற இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ஏற்கெனவே விவசாயத்தில் ஆண்டுதோறும் தொடா் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு அரசின் செயல்பாடு கவலையளித்தது.
இந்த நிலையில், இந்தாண்டு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட வருவாய்க் கிராமங்களில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுநாள் வரை இடுபொருள்கள் வழங்கப்பட்டு வந்த உழவு மானியம் இந்த ஆண்டு பழைய நடைமுறையான பணமாக வழங்க அரசு முடிவு செய்தது. கோடை உழவு மானியம் பெற இந்த ஆண்டு விவசாயிகளுக்கு அரசு அழைப்பு விடுத்தது.
இந்த ஆண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்கள் மட்டுமல்லாமல் அனைத்து கிராம விவசாயிகளுகளும் கோடை உழவு மானியம் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.