‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தர...
கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை
சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சாா்பில் மாநில அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலகம், சேப்பாக்கம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசுப் பணியாளா்களில் 80 சதவீதம் போ், புகா் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, சென்னை கோட்டை ரயில் நிலையத்தை அரசு ஊழியா்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், உயா்நீதிமன்றத்துக்கு வருவோரும் அதிகளவு பயன்படுத்துகின்றனா். சட்டக் கல்லூரி மாணவா்கள், பாரிமுனை செல்லும் வியாபாரிகள், அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்பட பலருக்கும் முக்கியமான போக்குவரத்து நிலையமாக கோட்டை ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது.
அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய முக்கியமான ரயில் நிலையமான கோட்டை ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும். இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, அரசுப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.