இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்தி...
சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?
சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி (65) என்பவர் பணியாற்றி உள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதன்பின் துரைசாமி வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்திற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் வீரசம்பு, நேரில் துரைசாமியைப் பார்த்துள்ளார்.

ஏன் பணம் தரவில்லை என்று கேட்டு வீரசம்பு, துரைசாமிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீரசம்பு ஆட்டோவில் வைத்து துரைசாமியை, சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு துரைசாமி வந்தபோது, காவல் நிலைய வளாகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். அப்போது விசாரணையில், துரைசாமி இருசக்கர வாகனத்தில் திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டு, எழுதி தர சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென துரைசாமி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், துரைசாமி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு உறவினரும் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் துரைசாமி உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், திடீரென மயக்கம் போட்டு துரைசாமி விழுந்ததாகவும், பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகய்ஜ் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.