ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டு முன்னதாகவே(ஜூன் 4) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Central government will convene an all-party meeting on July 19, ahead of the Monsoon Session 2025