பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்த...
டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் உள்ள தங்களுடைய நிறுவனங்களில் இருந்து 2%, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை நோக்கி படையெடுத்த ஐடி துறை, தற்போது ஏஐ எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தால் மீண்டும் பின்னோக்கி தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
டிசிஎஸ் பணிநீக்கம் என்பது ஆரம்பம்தான், தொடர்ந்து அடுத்த சில வருடங்களில் மற்ற நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் டிசிஎஸ் பணிநீக்கத்தினால் ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவைச் சந்திக்கும் என்று அதுசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் பணிநீக்கத்தில் ஈடுபடும்பட்சத்தில் இந்தியாவில் முக்கிய நகரங்களில் குறிப்பாக பெங்களூரூ, புணே, ஹைதராபாத், சென்னை போன்ற தொழில்நுட்ப நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அனராக் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மண்டல இயக்குனர் மற்றும் தலைவர் பிரசாந்த் தாகூர் கூறுகையில், "இந்தியாவில் ஐடி துறையின் முன்னோடி, டிசிஎஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது டிசிஎஸ் பணிநீக்கத்தை அறிவித்துள்ளதால் மற்ற நிறுவனங்களும் இதனைப் பின்பற்றலாம். அப்படி நடந்தால் ஒட்டுமொத்தமாக ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத், புணே நகரங்களில் முக்கிய ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் நடுத்தர மற்றும் உயர்மதிப்புள்ள வீடுகள், மனைகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பணிநீக்கம் தொடர்ந்தாள் வரும் காலங்களில் இதன் பங்களிப்பு குறையலாம்.
கரோனாவுக்குப் பிறகு ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது, அதனால் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 2022 - 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அவர்கள் கணிசமாக பங்களிப்பு செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
எனினும் நகரங்களில் சொந்த வீடுகளில் உள்ளவர்களிடையே இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறும் பிரெஸ்டீஜ் குழுமத்தின் மூத்த அதிகாரி பிரவீர் ஸ்ரீவாஸ்தவா, "இன்று நாடு முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. பெங்களூருவில் மட்டும் 2024-25 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பணிநீக்கத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் 7.9 கோடி சதுர அடி அளவில் ஒரு அலுவலக இடம் பதிவு செய்யப்படுகிறது. பெங்களூரு 2.18 கோடி சதுர அடியுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே, ஐடி துறைகளின் தேவையும் வலுவாகவே இருக்கிறது. அதனால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படும் என்று கருதவில்லை" என்று கூறினார்.
இருப்பினும் புணேவில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இதுபற்றி கவலை தெரிவித்துள்ளார். '2024 முதல் ஐடி ஊழியர்கள் அதிக ஊதியம் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைப்பதால் இப்போது ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது. அதிக ஊழியர்களைப் பணிக்கு அமர்த்த நிறுவனங்கள் தயங்குகின்றனர். தொடர்ந்து பணிநீக்கங்கள் நடைபெறும்பட்சத்தில் விளைவுகள் இருக்கும்' என்று தெரிவித்தார்.
அனராக் நிறுவனத் தகவலின்படி, 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025 இரண்டாம் காலாண்டில் வீட்டுமனை மற்றும் வீடுகள் விற்பனை 20% சரிந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 120,335 யூனிட்கள் விற்பனையான நிலையில் 2025ல் 96,285 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. செய்யறிவு தொழில்நுட்பத்தால் மேலும் பல துறைகள் சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலை உத்தரவாதமின்மை மற்றும் திடீர் பணிநீக்கங்கள் தனிப்பட்டவர்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் தங்களது ஊதியத்தின் அடிப்படையில் வீடுகளை, மனைகளை வாங்கி அதற்கு பெருந்தொகையை இஎம்ஐ-யாக செலுத்தி வரும் நிலையில் பணிநீக்கம் தொடர்ந்தால் அவர்கள் இந்த பெரும் தொகை இஎம்ஐ-யை செலுத்த முடியாமல்கூட போகலாம் என்றும் பேசப்படுகிறது.
ஐடி தொழில்துறையின் சங்க அமைப்பான நாஸ்காம், செய்யறிவு தொழில்நுட்பத்தினால் வரும் மாதங்களில் பல நிறுவனங்களில் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வரலாம் என்று கூறுகிறது.
ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை நடப்பாண்டு பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.