திருப்பூா் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு
திருப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
திருப்பூா், நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் திருமலைசாமி (58), இவரின் மகன் ஜீவானந்தம் (26). இருவரும் நெருப்பெரிச்சலில் இருந்து கூலிப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா்.
புதியவாவிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிா்பாராத விதமாக இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த திருமலைசாமி, ஜீவானந்தம் ஆகிய இருவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் திருமலைசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
ஜீவானந்தத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.