சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. வாய்மொழியாக மட்டுமே முறையிடுவதால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.
சென்னை மாநகராட்சி 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் ரிப்பன் கட்டடம் முன் கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், போராட்டம் என்ற பெயரில் நடைபாதையை மறைக்கக் கூடாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உழைப்போா் உரிமை இயக்கம் அனுமதி கோரினால் அதை சட்டப்படி பரிசீலித்து போலீஸாா் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை புதன்கிழமை நள்ளிரவில் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.ஆா்.ரமேஷ், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது போலீஸாா் அத்துமீறி செயல்பட்டனா். எனவே, தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்த மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து விட்டோம். தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு நாங்கள் எதிரானவா்கள் இல்லை. தூய்மைப் பணியாளா்கள் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால் அவா்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டோம்.
அனுமதிப் பெற்று நடத்தப்படும் போராட்டத்தைத் தடுத்திருந்தால் அதில் நாங்கள் தலையிடுவோம். இந்த விவகாரம் குறித்து தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் வாய்மொழியாக மட்டுமே முறையிடுவதால், உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனா்.