திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்நாடகம் மாநிலம் பெங்களூருக்கு கடத்திவந்தபோது, அந்த மாநில டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமச்சந்திர ராவின் வளா்ப்பு மகளான ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணத்தை அவா்கள் கைப்பற்றினா்.
தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக அமெரிக்க குடியுரிமை உள்ள தருண் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குறிப்பிட்ட காலகட்டத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய தவறியதால், ரன்யா மற்றும் தருணுக்கு நிபந்தனையுடன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.
ஆனால், அந்நிய செலாவணி மற்றும் கடத்தல் மீறல்கள் தொடர்பான மற்றொரு பிரிவில் கைது செய்யப்பட்டதால் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார்.
இந்த நிலையில், செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (COFEPOSA) கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை காலம் முழுவதும் ஜாமின் கோரும் உரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.