நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!
கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா வெப்ப உச்சி மாநாடு 2025-ல், வெப்பத்தின் தீவிரத் தாக்கம் குறித்து மருத்துவ அமைச்சகத்தின் ஆலோசகர் செளமியா சுவாமிநாதன் பேசியதாவது,
''வெப்பவாதத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான தரவுகள் கடலில் உள்ள பனிப்பாறையின் நுனியைப் போன்றுதான் உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வலுவான தரவுகள் நாடு முழுவதுமே இல்லை.
இறப்பு சார்ந்த தரவுகளைச் சேகரிக்கும் அமைப்புகளை சீரமைத்து பரவலாக்க வேண்டும். ஏனெனில் தரவுகளே அரசுக்கான சிறந்த ஆதாரம்'' எனக் குறிப்பிட்டார்.
வலுவான தரவுகள் இல்லாததால், வெப்பம் தொடர்பான இறப்புகளை இந்தியா பெரும்பாலும் குறைவாகக் கணக்கிடுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மேலும், வெப்பவாதம் மற்றும் வெப்பம் தொடர்பான இறப்புகள் குறித்து தேசிய அளவில் தற்போது தரவு எதுவும் இல்லை என்றும், தற்போதுள்ள தரவுத் தொகுப்புகளிலிருந்து அனுமானங்களை வகுத்துக்கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாந்தினி சிங், வெப்ப இறப்புகளை இந்தியா பதிவு செய்வதில் சாவால்கள் இருப்பதாகவும், குறிப்பிட்டுத் தெரிந்துகொள்ள எந்த இடத்திலும் சரியான தரவுகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறையின் மத்திய நோய்த் தடுப்பு மையமானது, வெப்பவாதம் மற்றும் வெப்ப கால இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நோய்க் கண்காணிப்புத் திட்டம் மூலம் இதனைச் செய்கிறது.
இதையும் படிக்க | பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி