நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி
நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஊத்தங்கரை சாா்பு நீதிபதி திருஞானசம்பந்தம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்து தொடங்கிவைத்தனா். ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது.
மாவட்ட, வட்ட நீதிமன்றங்களில் ஏழு நாள்களும் செயல்படும் சமரச மையத்தில் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ அணுகி இரு தரப்பினரும் சமரசம் பெறலாம். தேசிய அளவில் நடைபெறும் சிறப்பு சமரச முகாமை பொதுமக்கள் 90 நாள்கள்வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்குரைஞா் மூலமாக முறையிட்டு சமரசம் செய்துகொள்ளலாம் என பேரணியில் பங்கேற்றோா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா்.